×

டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு 2,2,3... இல்லாவிட்டால் 0,0,7: அடித்து சொல்கிறார் அல்கா லம்பா

புதுடெல்லி: ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், இரு கட்சிக்கும் தலா 2 தொகுதிகளும், பாஜவுக்கு 3 தொகுதியிலும் வெற்றி உறுதி என்றும், அமையாவிட்டால் இரு கட்சிகளுக்கும் 0, பாஜவுக்கு 7ம் கிட்டும் எனவும் எம்எல்ஏ அல்கா லம்பா கூறியுள்ளார். திறமையால் முன்னுக்கு வந்த அரசியல்வாதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் எம்எல்ஏ அல்கா லம்பா குறிப்பிடத்தக்கவர். காங்கிரஸில் ஆண்டுக்கணக்கில் தீவிர அர்ப்பணிப்பு செலுத்திய சீக்கியரான அல்கா, ஊழலுக்கு எதிரான இயக்கத்தால் கவரப்பட்டு பின்னர், ஆம் ஆத்மி கட்சியை கெஜ்ரிவால் தொடங்கியதும் அதில் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக கட்சியின் விமர்சனத்துக்கு அல்கா, அடிக்கடி ஆளாகி வந்தார். குறிப்பாக, மாஜி பிரதமர் ராஜிவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதை திரும்ப பெற வேண்டும் எனும் தீர்மானம் ஏகமனதாக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் நிறைவேறியபோது, எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து வெளியேறியவர் ஆளும் கட்சியின் ஒரே எம்எல்ஏ அல்கா ஆவார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய அல்காவை, கட்சியை விட்டு விலகும்படி கெஜ்ரிவால் அதே சமயத்தில் குறுந்தகவல் அனுப்பியதாக அல்கா அப்போது தெரிவித்தார்.

மேலும், கட்சியின் வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து தன்னை நீக்கம் செய்துள்ளதாகவும் இரு மாதங்களுக்கு முன் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தினார். அதோடு அழையா விருந்தாளியாக செல்ல மாட்டேன். காங்கிரஸ் அழைப்பு விடுத்தால் நிச்சயம் இணைவேன் என சூசக மிரட்டல் விடுத்ததை அடுத்து, ஆம் ஆத்மி வாட்ஸ் அப் குரூப்பில் மீண்டும் அவர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அம்சத்தை வலியுறுத்தாமல் காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான வாக்குறுதி அறிக்கையை இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதையடுத்து காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்தால், டெல்லியின் 7 தொகுதிகளில் இரு கட்சிக்கும் தலா 2 இடங்களும், பாஜவுக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்றும், கூட்டணி இல்லை என்றால் இரு கட்சிகளுக்கும் ஒரு தொகுதி கூட கிடைக்காது, 7 தொகுதிகளையும் பாஜவே கைப்பற்றும் என அதிரடி கருத்து தெரிவித்தார். அல்காவின் இந்த கருத்து ஆம் ஆத்மியை அதிர்ச்சியுறச் செய்தது. பதவியை ராஜினாமா செய்யும்படி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் அல்காவுக்கு நேற்று முன்தினம் தகவல் அனுப்பினார்.

அதைத் தொடர்ந்து, சாந்தினி சவுக் எம்எல்ஏவான அல்கா லம்பா, அப்பகுதியில் உள்ள ஜும்மா மசூதிக்கு சென்று, அங்கு மக்களை திரட்டி, நான் ராஜினாமா செய்ய வேண்டுமா என கேள்வி எழுப்பினார். மக்கள் கூட்டத்தில் அல்கா கூறியதாவது: இரண்டாம் முறையாக ராஜினாமா செய்யும்படி எனக்கு கட்சி நெருக்கடி அளித்துள்ளது. இப்படி அடிக்கடி என்னை தொல்லை செய்கின்றனர். பாஜவுக்கு எதிராக கட்சி சார்பில் கடுமையாக போராடி வருகிறேன். கூட்டணி இல்லாமல் பாஜவை தோற்கடிக்க முடியாது என இதே மசூதி முன்பாக முதல்வர் கெஜ்ரிவால் ஒப்புக் கொண்டது உங்களுக்கு தெரியும். பாஜவை தோற்கடிக்க வேண்டுமானால் நான் இதே கட்சியில் இருக்க வேண்டுமா? அல்லது காங்கிரஸை ஆதரிக்கவா? என்று நீங்கள் தான் எனக்கு அறிவுறுத்த வேண்டும். உண்மையான அர்ப்பணிப்போடு நடக்கும் எனக்கு எதிராக கட்சியில் சிலர் நடந்து கொள்கிறார்கள். ராஜினாமா செய்யும்படி கட்சிக்காரர்கள் நெருக்கடி அளிக்கிரார்கள். ஏன் ராஜினாமா செய்ய வேண்டும். என்ன தவறு செய்தேன் என எனக்கு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தொகுதி மக்களாகிய நீங்கள் கூறுங்கள். நான் ராஜினாமா செய்ய வேண்டுமா? இவ்வாறு மக்களிடம் அல்கா கேள்வி எழுப்பி டெல்லி அரசியலில் புதிய புயல் கிளப்பி உள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,alliance ,Congress ,AAP ,Alka Lamba , AAP,Congress, Alka Lamba
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...